Saturday, 19 November 2016

முருங்கை மரம்


முருங்கை மரம்
  எண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாகும் முருங்கை! எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
  முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.
  முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.
  முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும். விதையில் இருந்து எண்ணெய் தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.
   முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது. ஈரபதம் – 75.9%, புரதம் – 6.7%, கொழுப்பு – 1.7%, தாதுக்கள் – 2.3%, இழைப்பண்டம் – 0.9% , கார்போஹைட்ரேட்கள் – 12.5%, தாதுக்கள், வைட்டமின்கள், கால்சியம் – 440 மி.கி, பாஸ்பரஸ் – 70 மி.கி, அயம் – 7 மி.கி, வைட்டமின் சி 220 மி.கி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைந்த அளவில் உள்ளது

No comments:

Post a Comment